முனைவர் ஆ. தசரதன் திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், குறும்பலாப்பேரியில் தைப்பூசத்தன்று பிறந்தார். பாவூர்ச்சத்திரத்தில் பள்ளிப்படிப்பும் பாளையங் கோட்டை தூய யோவான் கல்லூரியில் பட்டப்படிப்பும், 1973இல் தெ.தி. இந்துக்கல்லூரி, நாகர்கோவிலில் எம்.ஏ. (தமிழ்) பட்டமும் பெற்றார். எம்.ஏ. முதலாண்டில் ஆபிரகாம் அருளப்பனார் பரிசையும், எம்.ஏ. இரண்டாம் ஆண்டில் முதல் வகுப்பில் முதலாவதாகத் தேறி, சாஸ்தாங்குட்டி பிள்ளை தங்கப் பதக்கத்திற்கான பரிசையும் பெற்றார்.

Image of Dr. A. Thasarathan

ஆ. தசரதன்

1974 முதல் 1977 வரை கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் டாக்டர் பட்டத்துக்காக ஆய்வு செய்தார். 1975இல் தெ.தி. இந்துக் கல்லூரியில் மொழியியலில் டிப்ளமோவையும் பெற்றார். 1978இல் திருவனந்தபுரத்திலிருக்கும் உலகத் திராவிட மொழியியல் நிறுவனம் இவரை ஜெர்மனியிலுள்ள கோலோன் பல்கலைக் கழக இந்தியவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்ற அனுப்பியது. அங்குப் பணியாற்றியபின் அதே ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா மற்றும் கீழை நாட்டு ஆய்வு நிறுவனத்தில் டாக்டர் ஜான் மார் அவர்களின் பராமரிப்பில் மொழியியலும் மற்றும் Relational Grammarம் பல்கலைக்கழகக் கல்லூரியில் கற்றார்.

1979இல் தாயகம் திரும்பிய பின் இன்டர்நேஷனல் பிரிண்டர்ஸ் அண்ட் பப்ளிசர்ஸ் என்ற நிறவனத்தைத் தொடங்கினார். திராவிட மொழியியல் நிறுவனத்தில் 1980இல் இளநிலை ஆய்வாளராகச் சேர்ந்து பின் அதன் புதுதில்லி அலுவலகத்தில் பணியாற்றினார். 1981இல் புதுதில்லியிலுள்ள Asian Educational Services என்ற புத்தக வெளியீட்டகத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றினார். 1982இலிருந்து இண்டர்நேஷனல் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பதிப்பாளராகவும் வெளியீட்டாளராகவும் விளங்குகின்றார்.

கேரளப் பல்கலைக்கழகம் இவருக்கு Syntactical Structures of 20th Century Tamil Poems (இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளின் தொடரமைப்புகள்) என்ற தலைப்பிலான ஆய்வேட்டுக்கு டாக்டர் பட்டம் அளித்தது. தொடர்ந்து 1982-84 ஆண்டுகளில் திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார்.

இவர் 1984 முதல் 1994 வரை சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனத்தில் தமிழ்த் துணைப் பேராசிரியராகவும், ஓலைச் சுவடித் துறைத் தலைவராகவும் பணிசெய்து பல ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தும், ஓலைச் சுவடிகள் அட்டவணைகளைத் தயாரித்தும் சாதனை புரிந்தார். 1996-1997ஆம் ஆண்டுகளில் திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளராக சென்னையிலிருந்து பணியாற்றினார். 1998 முதல் 2000 வரை சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு நிலை ஆய்வாளராகவும், 2003 முதல் 2006 வரை திட்டக்கல்விப் பணியாளராகவும் பணியாற்றினார். 2006 முதல் இந்நிறுவனப் பதிப்புப்பணி மூலம் பல நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்து வருகிறார்.

இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதிப் பன்னாட்டு, உள்நாட்டு நிறவனக் கருத்தரங்குகளில் வழங்கியுள்ளார். இக்கட்டுரைகள் ஆய்விதழ்களிலும் நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. 25க்கும் மேற்பட்ட சுவடிப் பதிப்பு நூல்களையும் வேறு பல நூல்களையும் இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இவற்றில் பல கதைப்பாடல்களாகும்.

------