ஆய்வு > ஆய்வாளர்கள் > திரு. எஸ். டி. நெல்லை நெடுமாறன்
திரு. எஸ். டி. நெல்லை நெடுமாறன்
தென்பாண்டி நாட்டுத் திருசெந்தூர்ப் பகுதித் நிலமைக்காரர்கள் வாழும் நாலுமாவடியில் பொன் திராவியம் நாடார், அண்ணாமலைக்கனி அம்மாள் தம்பதியரின் பதினொரு புதல்வியருக்குப்பின் 12வதாகத் தோன்றிய ஒரே புதல்வராக 1939ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 9ஆம் நாளில் பிறந்தவர் திரு. எஸ். டி. நெல்லை நெடுமாறன்.

தொல்லியல் அறிஞர் நெல்லை நெடுமாறன்
1975ஆம் ஆண்டு நாட்டில் அவசரநிலை அறிவிக்கப் பட்டது. மிசா சட்டத்தில் நெல்லை நெடுமாறனும் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையிலிருந்தார். தமிழக வரலாற்று ஆய்வும் படிப்பும் இவரைத் தீவிர அரசியலிலிருந்து விலகச் செய்தன. இவரது அரசியல் துறவறம் தமிழக வரலாற்றாய்வுத் துறைக்குப் பெரும்பேறாக அமைந்து விட்டதெனில், அது மிகையாகாது.
அதனைத் தொடர்ந்து இவரது கவனம் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், தொல்லியல் சான்றுகள், நாணயங்கள் என எல்லாத் திசைகளிலும் சென்றது. படிக்கப்பட்டிராத ஒரு கல்வெட்டோ, ஓலைச்சுவடியோ இருப்பதாகக் கேள்விப்பட்டால், அது எத்தனைத் தொலைவில் இருந்தாலும் காலத்தையும், பொருட்செலவையும் பொருட்படுத்தாது, உடனே சென்று பார்த்துவிடுவார். அதைப் போன்றே வரலாறு, தொல்லியல் தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள் நடைபெற்றால் அங்கெல்லாம் இவரைத் தவறாமல் பார்க்க முடியும்.
இவருடைய தொடக்ககால ஆய்வுகளில் சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடைய வேந்தர்களில் வமிசாவளியினர் தற்போது யாராக உள்ளனர் என்ற தேடுதலே விஞ்சியிருந்தது. அதன் விளைவாகத் தொல்லியல் அறிஞர் சீ. இராமச்சந்திரன் அவர்களின் தொடர்பு கிடைத்தது. இவருடைய தேடலுக்கு விடையும் கிடைக்கத் தொடங்கியது. அது முதல் இவர் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பலப்பல. சான்றோர் காடும் சான்றோர்நாடும், சான்றோர் காசு, நாட்டார் மாடை, முந்நூற்றுவர், எழுநூற்றுவர்போன்ற தொடக்கக் காலக் கட்டுரைகள் இவருடைய தனிப்பட்ட தேடுதல் முயற்சியால் எழுதப்பட்டன. தொல்லியல் துறை அறிஞர்கள் பலரின் தொடர்பும் கிடைத்த பின் இவரது கட்டுரைகள் பெருமளவில் வரவேற்பைப் பெற்று ஏடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.
Studies in South Indian Coins என்ற நூலின் நான்காம் தொகுதியில் Sanar Kasu (சாணார் காசு) எனும் தலைப்பில் திரு. நெல்லை நெடுமாறன் அவர்கள் சான்றார் காசு பற்றி மேற்கொண்ட ஆய்வு பற்றிக் குறிப்பிடப் பெற்றுள்ளது. திரு. நடன. காசிநாதன் தாம் எழுதிய தமிழர் காசு இயல் என்ற நூலில் A Note on Sanar Kasu எனும் கட்டுரை தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் பெயரில் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப் பெற்றுள்ள அறக்கட்டளையின் ஆறாம் சொற்பொழிவாக உரையாற்றியதன் அச்சு வடிவமாகும். இது 1995ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது. திரு. நெல்லை நெடுமாறன் மற்றும் திரு.சி.ராமச்சந்திரன் இணைந்து எழுதிய வேளிர் மற்றும் வெள்ளை நாடார் போன்ற அறிஞர் கட்டுரைகள் குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
திரு. நெல்லை நெடுமாறன் வரலாறு, கல்வெட்டு போன்ற ஆய்வுகளில் உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டின் கீழ் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கல்வெட்டு உறுப்பினர் எனும் பதவியை 1996 ஆம் ஆண்டு முதல் இவர் பெற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழில் ஆவணங்கள் என்ற தலைப்பில் ஒரு தேசியக் கருத்தரங்கம் 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17, 18, 19 ஆகிய நாள்களில் நடந்தது. அதன் முத்தாய்ப்பாகத் தமிழ் ஆவணங்கள் மற்றும் கல்வெட்டு இயல்களில் பன்னெடுங்காலம் தொண்டாற்றிய அறிஞர்களுக்குப் பாராட்டுகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் முனைவர் இரா. நாகசாமி, புலவர் கோவிந்தராசனார், திரு. நடன. காசிநாதன், திரு. நெல்லை நெடுமாறன் ஆகியோருக்குச் சிறப்புகள் செய்யப்பட்டன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நெல்லை நெடுமாறனுக்குத் தொல்லியல் அறிஞர் எனும் பட்டத்தை அளித்தது இவர் மேற்கொண்டு வரும் ஆய்வுக்குக் கிடைத்த அங்கீகாரம் எனில் மிகையாகாது. நாடார் வரலாற்றில் திரு. நெல்லை நெடுமாறனின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. அவரது விரிவான ஆராய்ச்சி மற்றும் அர்ப்பணிப்பு மூலம், நாடார் சமூகத்தின் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் வரலாற்றில் வெளிச்சம் போடும் முக்கியமான வரலாற்று ஆவணங்கள் மற்றும் கல்வெட்டுகளை வெளிப்படுத்தினார்.